திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில்
பெருமாள் தாயார் திருக்கோலத்திலும், தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் காட்சி தரும் 'மாற்றுத் திருக்கோலம்' சேவை
ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திவ்யதேசம் திருஇந்தளூர். பெருமாள் திருநாமம் பரிமளரங்கநாதர். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி, சந்திரசாபவிமோசனவல்லி. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
காவிரி நதிக்கரையில் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுகள் பஞ்சரங்க தலங்கள் சென்று அழைக்கப்படுகின்றன. ரங்கம் என்றால் ஆறு பிரியும் இடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று, பரிமள ரங்கநாதருக்கு தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
'மாற்று திருக்கோலம்' என்பது, பெருமாள் மற்றும் நாச்சியார் ஆகியோரின் திருக்கோலம் ஆகும். இது, பெருமாள் நாச்சியார் திருக்கோலம் அல்லது தாயார் பெருமாள் திருக்கோலம் என்றும் அழைக்கப்படுகிறது.
வாசலில் சந்திர புஷ்கரிணி தீர்த்தம் உள்ளது. இதில் நீராடித்தான் சந்திரன் தன் சாபம் நீங்கப்பெற்றான். பெருமாளின் முகத்தை சந்திரனும், பாதத்தை சூரியனும், நாபிக்கமலத்தை பிரம்மனும் பூஜிக்கிறார்கள்.
தலைமாட்டில் காவிரித்தாயாரும், கால்மாட்டில் கங்கை தாயாரும் வழிபடுகிறார்கள். எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடியை பூஜை செய்கிறார்கள். கங்கையை விட காவிரி புனிதமானவள் என்று பெயர் பெற்ற தலம்.
ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம்
ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது.
நினைத்ததை எல்லாம் பெற்றுத்தரும் ஏகாதசி விரதத்தை அம்பரீசன் என்ற மன்னன் பல ஆண்டுகளாக கடைப்பிடித்து வந்தான். இவன் ஏகாதசியில் விரதம் இருந்து மறுநாள் துவாதசி நல்ல நேரத்தில் பிரசாதம் உண்டு விரதம் முடிப்பான்.
இவனது நூறாவது விரத நாளில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. நாட்டு மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் தேவலோகத்திலோ அனைவரும் கலக்கமாக இருந்தனர்.
அம்பரீசன் நூறாவது விரதம் முடித்து விட்டால் தேவலோகப்பதவி கூட கிடைத்து விடும். மானிடனுக்கு இப்பதவி கிடைத்து விட்டால் தேவர்களின் மரியாதை குறைந்து விடும் என பயந்தனர். இதனால் தேவர்கள் துர்வாச முனிவரிடம் சென்றனர்.
துர்வாசரும் தேவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துவிட்டு, மன்னனின் விரதத்தை தடுக்க பூமிக்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்திருந்தான். அவன் ஏகாதசி விரதம் முடித்திருந்தாலும் துவாதசி நேரம் முடிவதற்குள் அவன் உணவு அருந்தியிருக்க வேண்டும். அப்போது தான் ஏகாதசியின் முழுப்பயனும் அவனுக்கு கிடைக்கும். துவாதசி நேரம் முடிந்து விட்டால் பயனில்லை.
துவாதசி ஆரம்பிக்க மன்னன் உணவு உண்ண தயாராக இருந்தான். அதற்குள் துர்வாசர் வந்து விட்டார். தன் விரதத்தை தடுக்கத்தான் இவர் வந்துள்ளார் என்பது மன்னனுக்கு தெரியாது. முனிவரை வரவேற்ற மன்னன்,"தாங்களும் என்னுடன் உணவருந்தினால், எனக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகும்” என்றான்.
முனிவரும் சம்மதித்துவிட்டு நதியில் நீராடிவிட்டு வருகிறேன். அதன் பின் உணவருந்தலாம் என கூறி சென்றார். முனிவரின் திட்டம் என்னவென்றால், தான் நீராடிவிட்டு தாமதமாக வந்தால் அதற்குள் துவாதசி நேரம் முடிந்து விடும். மன்னன் நமக்காக காத்திருந்தால், அவனது விரதம் தடை படும் என்பது தான்.
துவாதசி முடிய இன்னும் சில மணி நேரங்களே இருந்தது. கோபக்கார துர்வாசர் வருவதற்குள் சாப்பிட்டு விட்டால் விரதத்தின் பலன் கிடைக்காமல் செய்து விடுவார். இன்னும் சிலநிமிடங்களே இருந்தது. வேதியர்களிடமும், அந்தணர்களிடமும் என்ன செய்யலாம் என ஆலோசனை செய்தான்.
உடனே தலைமைப் பண்டிதர், "உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்தால் விரதம் முடிந்து ஏகாதசியின் முழுப்பயனும் கிடைத்துவிடும்”, என்று கூறினர். அதேபோல் பெருமாளை நினைத்து உள்ளங்கை அளவு தீர்த்தத்தை மூன்று முறை குடித்து தன் விரதத்தை பூர்த்தி செய்து விட்டு, முனிவருடன் சேர்ந்து சாப்பிடுவதற்காக காத்திருந்தான்.
இதனை தன் ஞான திருஷ்டியால் அறிந்த துர்வாசர் மிகுந்த கோபமடைந்தார். உடனே துர்வாசர் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனை கொல்லுமாறு ஆணையிட்டார். அம்பரீசன் இதற்கு பயந்து பரிமளரங்கநாதரிடம் சென்று, "பெருமாளே! உனக்காக ஏகாதசி விரதம் இருக்கக்கூடாது என்பதற்காக ஏவப்பட்டுள்ள பூதத்திடம் இருந்து என்னைக் காப்பாற்று” என பெருமாள் பாதத்தில் சரணடைந்தார்.
பெருமாள் கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையெல்லாம் அறிந்த துர்வாசர் பெருமாளிடம் மன்னிப்பு கேட்க, பெருமாளும் மன்னித்து அவரது கர்வத்தை அடக்கினார்.
நூறு ஏகாதசி விரதம் இருந்து முடித்த மன்னனிடம், "வேண்டியதைக் கேள்” என்றார். அதற்கு மன்னன், "தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து வரும் பக்தர்களின் குறைகேட்டு அருள் புரிய வேண்டும்”, என வேண்டினான். பெருமாளும் மன்னனின் விருப்பப்படி இத்தலத்தில் அருள்புரிந்து வருகிறார்.
பரிமள ரங்கநாதர் கோவில்
ஸ்ரீதேவி கங்கையாகவும், பூதேவி காவிரியாகவும் காட்சியளிக்கும் திவ்ய தேசம்
மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில், இத்தலம் பஞ்சரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பெருமாள் திரு நாமம் பரிமளரங்கநாதர்.தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி.
பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார். பெருமாள் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.
மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதியாக கருதப்படுகிறது. இத்தலத்தில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவா, விஷ்ணு கோயில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக் கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.