தேவன்குடி கோதண்ட ராமர் கோவில்
கண் கொடுத்த கோதண்டராமர்
தென் இந்தியாவின் அயோத்தி என்று போற்றப்படும் தலம்
மன்னார்குடிக்கு வடகிழக்கே, காவிரியின் துணை நதி கோரையாற்றின் தென்கரையில் உள்ள தேவன்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்ட ராமர் கோவில். இந்தக் கோவில் சுமார் பல நூற்றாண்டுகள் பழமையானது.
முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது.
ராமாவதாரத்தில் தென்னகம் நோக்கிய பயணத்தில் ஸ்ரீராமர், இளையபெருமாளோடு சீதையைத் தேடி வந்த இடங்களுள் தேவன்குடியும் ஒன்று. இக்கோவிலில். ஸ்ரீசீதா, லட்சுமண, பரத, சத்ருகன, அனுமன் சமேதமாக ஸ்ரீ கோதண்ட ராம சுவாமி அருள்பாலித்து வருகிறார். ராமர் தனது கையில் வில்லேந்திய கோலத்தில் உள்ளார். தென் இந்தியாவின் அயோத்தி என்று இத்தலம் போற்றப்படுகிறது.
இங்குள்ள ராமர் மிகவும் சக்தி வாய்ந்தவராகக் கருதப்படுகிறார். முற்காலத்தில் இந்த ராமர் கோவிலில் கண் தெரியாத ஒருவர் தினமும் பிரதட்சணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால், தன்னுடைய நிலங்களை இந்த கோவிலுக்கு நன்றியுடன் கொடுத்து விட்டார். அதனால் இந்த ராமருக்கு 'கண் கொடுத்த கோதண்டராமர்' என்ற பெயர் உண்டாயிற்று.
இக்கோவிலில் உள்ள ராமர் கண் பார்வை இழந்தவர்களுக்குப் பார்வை அளிக்கும் வல்லமை கொண்டவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே கண் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளவர்கள்இங்குள்ள மூலவருக்கு சிறப்புப் பிரார்த்தனை செய்துஅபிஷேகம் மற்றும் ஆராதனை செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.
இந்த கோவில் மணி சுமார் 800 கிலோ எடை கொண்டது. மிகப் பெரிய இந்த மணியின் ஒலி அக்கம் பக்கத்து ஆறு, ஏழு கிராமங்களுக்குக் கேட்குமாம்.
இக்கோவிலில் ஸ்ரீராம நவமி, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலயத்தில் ஸ்ரீராமநவமி, புனர்பூசம் நட்சத்திரம், ஏகாதசி புதன் மற்றும் சனிக்கிழமைகளில், அங்கப் பிரதட்சணம் செய்வது, நல்லெண்ணையில் விளக்கேற்றுவது, துளசி தீர்த்தத்துடன் திருமஞ்சனம் செய்வது, ஆலயத்தில் முழு முந்திரி கலந்த புளியோதரை விநியோகம் செய்வது ஆகியவை நற்பலன்களை தரும்.
இழந்த செல்வத்தை மீண்டும் பெற, காலதாமதம், பண விரயம், பித்ரு தோஷம் நீங்க மன சாந்தி, குல விருத்தி அடைய, வாழ்க்கையில் நல்வழி கிடைக்க இந்த தலத்திற்கு வந்து வேண்டினால், வேண்டியது கிடைக்கும் சிறப்பு வாய்ந்த தலமாகும். அயோத்திக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செலுத்தலாம்.