நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்

நசரத்பேட்டை காசி விசுவநாதர் கோவில்

நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தரும் அபூர்வ தோற்றம்

துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி இருக்கும் அரிய காட்சி

சென்னை பூந்தமல்லியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நசரத் பேட்டை காசி விசுவநாதர் கோவில். இறைவியின் திருநாமம் விசாலாட்சி.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. புராண காலத்தில் இவ்வூர் 'புருஷமங்களம்', 'தருமபுரி ஷேத்ரம்' முதலான பெயர்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையது.

காசியில் உள்ளது போல இத்தலத்து விசுவநாதரின் சிவலிங்கத் திருமேனி மிகவும் சிறியது.கருவறையின் நுழைவுவாசலின் இருபுறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சி தருகின்றனர். துவாரபாலகர்களின் அருகில் அதிகார நந்தி காட்சி தருவது ஒரு அரிய காட்சியாகும்.

இந்த கோவிலில் கார்கோடக மகரிஷி ஈசனை பூஜித்து வழிபட்டதாக ஐதீகம். கார்கோடக மகரிஷி காசியிலிருந்து இவரை எடுத்துவந்து இங்கு பிரதிஷ்டை செய்தார். கார்கோடக மகரிஷியின் ஜீவசமாதி அருகிலுள்ள பூந்தமல்லியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவிலில் இருக்கின்றது.

இந்தக் கோவிலில் நந்தி பகவான் தனது தலையை வலது பக்கம் சற்று சாய்த்து, புன்னகை தவழும் முகத்துடன் தனது கால்களை மடித்து அமர்ந்திருக்கிறார். அவரது திருமேனியை சலங்கை மணிகளும், ஆபரணங்களும் அலங்கரிக்கின்றன. அவரது மடிந்த இடது முன் பாதத்தின் கீழ் பாம்பு ஒன்று காட்சி அளிக்கிறது. ​இங்குள்ள பாம்பு, இத்தலத்தில் முக்தி பெற்ற கார்கோடக மகரிஷியைக் குறிக்கின்றது. இப்படி நந்தி பகவானும், பாம்பும் இணைந்து காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத ஒரு அபூர்வ தோற்றமாகும்.

Read More