திருத்தங்கூர் வெள்ளிமலைநாதர் கோவில்
நவக்கிரகங்கள் சிவலிங்கம் நிறுவி வழிபட்ட தேவாரத் தலம்
திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருத்தங்கூர். இறைவன் திருநாமம் வெள்ளிமலைநாதர், ரஜதகீரிஸ்வரர். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. தென்னை மரங்கள் வளம் பெற்ற ஊராதலின் 'தெங்கூர்' என்று இத்தலத்திற்கு பெயர் வந்தது. அதற்கேற்ப தென்னை மரமே இத்தலத்தின் தலவிருட்சமாகும்.
ஒரு சமயம் சுக்கிரன் மகாவிஷ்ணுவின் சாபம் பெற்று ஒற்றைக் கண்ணுடன் மறைந்து வாழ்ந்து வந்தார். மகாவிஷ்ணுவின் சாபத்திலிருந்து விடுபட சிவனை வழிபடுவதே சிறந்தது என்று எண்ணி சுக்கிரன் இத்தலம் வந்து சிவபெருமானை ஒரு லிங்கம் நிறுவி வழிபட்டார். வெள்ளிமலைநாதர், அம்பாள் பெரியநாயகியுடன் சுக்கிரனுக்கு காட்சி தந்து வேண்டய வரத்தை அருளினார். சுக்கிரனுக்கு அருள் கிடைத்ததைக் கண்ட மற்ற எட்டு கிரகங்களும் தங்களது பெயர்களில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். பலவித அளவுகளில் அந்தந்த நவக்கிரகங்களின் பெயர்களாலேயே வழங்கப்படும் ஒன்பது சிவலிங்கங்களையும் தரிசித்து வழிபடுவோர் சகல நவக்கிரக தோஷங்களில் இருந்தும் விடுபடுவர் என்பது ஐதீகம்.