
அச்சுதமங்கலம் சோமநாதர் கோவில்
கால சர்ப்பங்கள் சாளரத்தில் எழுந்தருளி இருக்கும் அபூர்வ காட்சி
சகல நாக தோஷங்களுக்கான நிவர்த்தி தலம்
கும்பகோணம் நன்னிலம் சாலையில், ஸ்ரீவாஞ்சியம் தலத்திற்கு மிக அருகே 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது அச்சுதமங்கலம். இறைவன் திருநாமம் சோமநாதர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. திருநாவுக்கரசரால் வைப்புத் தலமாக வைத்துப் பாடப் பெற்ற தலம்.
இக்கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சாளரத்தில்,இரண்டு கால சர்ப்பங்கள் ஒன்றோடு ஒன்று பிணைந்தபடி காட்சி தருகின்றன. பொதுவாக சன்னதிகளில் அல்லது கோவில் மண்டபங்களில் காட்சி தரும் சர்ப்பங்கள், இங்கு சாளரத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு தனி சிறப்பாகும். இந்த சாளரத்தில் ஆதிசேஷன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன், அனந்தன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகிய எட்டு நாகங்களும் சூட்சும ரூபத்தில் இருக்கின்றன. இந்த சாளரத்து நாகங்களை வழிபட்டால் சகல நாக தோஷங்களும் விலகும். இதன் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானின் திருமேனியில் ஆபரணங்களாக உள்ள நாகங்களுக்கு, சிவபெருமானை வழிபடும் போது தங்களைத்தான் வழிபடுகிறார்கள் என்ற கர்வம் ஏற்பட்டது. இதனால் சிவபெருமானின் சாபத்தை பெற்றார்கள். நாகங்கள் சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டி நின்றபோது, சிவபெருமான் அவர்களை சிவராத்திரி அன்று, ஆலமர விழுதை நாராக எடுத்து, அகத்தி பூவை வைத்து மாலையாக தொடுத்து இத்தலத்தில் தன்னை வழிபட்டால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார். இந்த வழிபாட்டை அன்று தவறவிட்டால் சாப விமோசனம் கிடையாது என்றும் நிபந்தனை விதித்தார். அதனால் தான் இன்றும் இத்தலத்தில் ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை, அகத்தி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை.
இக்கோவில் சாளரத்தில் சூட்சும ரூபத்தில் இருக்கும் அஷ்ட நாகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இரண்டு தீபம் ஏற்றி , சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, அம்பாள் சன்னதியில் உளுந்து, கொள்ளு தானம் செய்து ஒன்பது வாரங்கள் வழிபட்டால் ராகு கேது தோஷம், கால சர்ப்ப தோஷம், அனைத்து நாக தோஷங்களும் விலகும்.