
காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்
யானையின் கீழ் பிரம்மாவும், லட்சுமி நாராயணரும் காட்சி தரும் அபூர்வ சிற்பங்கள்
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இக்கோவிலின் வடிவமைப்பும், கோவில் சிற்பங்களின் கலை நுணுக்கமும் பார்ப்பவர்களை வியக்க வைக்கும்.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சுந்தரேஸ்வரர் சன்னதி விமானத்தை 8 வெள்ளை யானைகள் தாங்கிக் கொண்டிருக்கும். அது போலவே இக்கோவிலிலும் இறைவன் நஞ்சுண்டேசுவரர் விமானத்தை 8 யானைகள் தாங்கியபடி இருக்கின்றன. இதில் ஒரு யானை சிற்பத்திற்கு கீழ் பிரம்மாவும், மற்றொரு யானைக்கு கீழே லட்சுமி நாராயணரும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். மற்றொரு யானையின் கீழ் சிம்மம் அமைந்திருக்கின்றது.
கருவறையின் வெளிச்சுவற்றில் பல அழகிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. ரிஷபத்தின் மேல் காட்சியளிக்கும் சிவபெருமான் பார்வதி, தண்டாயுதபாணியாக முருகப்பெருமான், ஐந்து தலை நாகம் குடை பிடிக்கும் சிவலிங்கம், பெரிய யாளி உருவங்கள் ஆகியவை நமக்கு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளன. வெளிச்சவற்றின் அடிப்பக்கத்தில் குதிரைப்படை வீரர்களின் அணிவரிசை, அலங்கார வளைவுகள், ஒரே சீராக அமைக்கப்பட்ட பலவிதமான வடிவங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில்
இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் அபூர்வ சிவலிங்கத் திருமேனி
நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சி அளிக்கும் தனிச்சிறப்பு
கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் 29 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது காரமடை நஞ்சுண்டேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் லோகநாயகி. இக்கோவில் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இத்தலத்து மூலவர் நஞ்சுண்டேஸ்வரர் செந்நிறமாக காட்சியளிப்பது ஒரு தனிச் சிறப்பாகும். மேலும் இறைவனின் சிவலிங்கத் திருமேனிக்கு பிரதான ஆவுடையார் தவிர, சன்னதிக்குள் சிவலிங்கத்தைச் சுற்றி, மற்றொரு ஆவுடையார் போன்ற அமைப்பில் தரையில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இவர் இரண்டு ஆவுடையார்களுடன் காட்சி தருகிறார். இப்படி இரண்டு ஆவுடையார்களுடன் இருக்கும் சிவலிங்கத் திருமேனியை நாம் வேறு எந்த கலத்திலும் தரிசிக்க முடியாது.
சிவ பெருமான், அமிர்தம் எடுப்பதற்காக பாற்கடலைக் கடைந்த போது வெளிவந்த ஆலகால விஷத்தை உட்கொண்டு பிரபஞ்சத்தைக் காப்பாற்றினார். விஷத்தை சிவ பெருமான் பிரதோஷ நேரத்தில் தான் அருந்தினார் என்பதால், இந்த சிவனுக்கு பிரதோஷ நேரத்தில் விசேஷ வழிபாடு நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் விஷக்கடி பட்டவர்கள் இறைவனிடம் வேண்டிக்கொண்டால் விஷக்கடியால் ஏற்பட்ட உடல் பிரச்னைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.