ஒன்பத்துவேலி வன்மீகநாதர் கோவில்
பிறந்த நாளில் வந்து வழிபட வேண்டிய கோவில்
எண்கணித ஜோதிடர்களும் நாடி கைரேகை ஜோதிடர்களும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள ஒன்பத்து வேலி கிராமத்தில், குடமுருட்டி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது, வன்மீகநாதர் கோவில். இறைவியின் திருநாமம் சோமகலா அம்பாள். இந்த கோவிலில் உள்ள சிவபெருமான், புற்றில் இருந்து தோன்றிய சிவலிங்கம் என்பதால் வன்மீகநாதர் என பெயர் வந்தது. வன்மீகம் என்பதற்கு புற்று என்று பொருள். சோமகலா அம்பாள், சந்திரனின் அம்சத்தை பெற்று விளங்குபவராக அமைந்து அருள் வழங்கி வருகிறார்.
ஒன்பத்து வேலி என்ற பெயர் ஒரு அபூர்வமான பெயராகும். ஜோதிட வல்லுநர்களும் கணிதமேதைகளும் பண்டைய காலத்தில் வாழ்ந்த தலமே ஒன்பத்து வேலியாகும். தற்போதும் நவாம்சம், நவநிதிகள், நவபாஷாணம், நவமூலிகைகள், நவசாரம், நவகற்கள், நவஜோதிகள், நவசக்திகள் போன்ற நவசாதனங்கள் பொங்கி பொழியும் தலம் என்பதால் எண்கணித ஜோதிடர்களும், நாடி கைரேகை ஜோதிடர்களும் வழிபட வேண்டிய தலமாக வன்மீகநாத சுவாமி கோவில் உள்ளது.
பக்தர்கள் தங்கள் பிறந்த நட்சத்திர நாளில், ஒன்பத்து வேலி வன்மீக நாதர் கோயிலுக்கு சென்று வழிபட்டால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று வளமான வாழ்வை அடைவார்கள் என்பது நம்பிக்கை. இதனால் ஒன்பத்து வேலி வன்மீக நாதர் வளமான வாழ்வை அருளும் வன்மீகநாதர் என அழைக்கப்படுகிறார். பக்தர்கள் தங்களின் பிறந்த நட்சத்திர நாளில், வன்மீகநாதரை வழிபடுவதன் மூலம் வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
மேலும் உடலில் ஏற்படும் சரும நோய்கள் தீர்க்க வன்மீக நாதரை வழிபட்டால் நிவாரணம் கிடைக்கும் .ஒன்பதாம் தேதி பிறந்தவர்கள் இந்த தலத்தில் வழிபாடுகளை செய்வது விசேஷமானதாகும் . எண் ஒன்பது என்பது செவ்வாய்க்குரிய எண் ஆகும். இதனால் செவ்வாய் திசை , செவ்வாய் புத்தி உள்ளவர்கள் ஒன்பத்து வேலி வன்மீக நாதரை வழிபட்டால் வளமான வாழ்வு கிடைக்கும்.
18 கைகள் கொண்ட வனதுர்க்கை
இந்த கோவிலில் சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கிடையில் 18 கைகள் உடைய அபூர்வ வனதுர்க்கை காட்சி அளிக்கிறார். எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வனதுர்க்கையை வழிபட்டு வந்தால் பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகள் போன்றவை நீங்கும் என்று கூறப்படுகிறது. 18 கை வனதுர்க்கைக்கு வெள்ளிக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் பூஜை நடத்தப்படுகிறது.
வானில் நட்சத்திர தரிசனம்
முற்காலத்தில் ராஜராஜ சோழன் தஞ்சாவூரில் இருந்து குதிரையில் ஒன்பத்துவேலிக்கு வந்து இரவில் வானில் நட்சத்திர தரிசனங்களை பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இக்கோவிலில் இருந்து வானில் விசேஷமான முறையில் நட்சத்திர தரிசனங்களை அந்த காலத்தில் பக்தர்கள் பெற்றார்கள் என்பது செவிவழி செய்தியாக அறியப்படுகிறது. இங்கிருந்து வான்வெளி நட்சத்திர கோள் தரிசனங்களை பெறுதல் நல்ல நினைவாற்றலை பெற்றுத் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் தங்கள் பிறந்த நாளில் வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.