அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில்
இடது பாதம் மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ள தட்சிணாமூர்த்தியின் அபூர்வத் தோற்றம்
சித்தர்கள் சிவபூஜை செய்த தலம்
அம்பாசமுத்திரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, அத்தாள நல்லூர் மூன்றீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மரகதாம்பிகை. இக்கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.
இந்தக் கோவிலின் மேற்குப் பிரகாரத்தில் மூன்று சிறிய சன்னதிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய சிவலிங்கத் திருமேனியும், அதற்கு முன்பாக ஒரு நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு மூன்று ஈசர்கள் எழுந்தருளியிருப்பதால், கருவறை மூலவருக்கு மூன்றீசுவரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி வலது காலைத் தொங்கவிட்டு, வலது முட்டியின் மீது இடது பாதம் முழுமையாக மேல் நோக்கி இருக்குமாறு அமர்ந்துள்ளார். அவரது இடது கை நாகத்தை தொட்ட நிலையில் இருக்கின்றது. தட்சிணாமூர்த்தியின் இந்த அபூர்வ தோற்றமானது, நாம் வேறு எந்த கோவிலிலும் காண முடியாத ஒன்றாகும்.
சித்தர்கள் சிவபூஜை செய்த தலம்
கைலாயத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தைக் காண முப்பத்து முக்கோடி தேவர்களும் கைலாயம் வந்தனர். இதனால் பூமியின் வடபகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இதை சரிசெய்ய சிவபெருமான் அகத்தியரை தென்பகுதிக்கு அனுப்பினார். அகத்தியரும் சிவனின் உத்தரவுப்படி தென்பகுதிக்கு வந்து பொதிகை மலையில் தங்கி சிவபூஜை செய்தார். இவருக்குப் பின் இந்த பொதியமலைக்கு பல சித்தர்கள் வந்தனர். அவர்கள் அகத்தியர் பூஜை செய்த சிவனை தரிசித்த பின் இந்தப் பகுதியில் உள்ள இந்த சிவாலயத்தில் தாங்களும் சிவபூஜை செய்தனர். இதனால் இக்கோயில் சித்தர்களின் பீடமாக கருதப்படுகிறது.
மண்டபங்களின் கொடுங்கைகளில் இடம் பெற்றுள்ள நுணுக்கமான சிற்ப தொகுப்புகள்
இக்கோவில் மண்டபங்களில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்ப தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. கோவில் மண்டபங்களின் கொடுங்கைகள் ஒன்றில் மயிலுடன் கூடிய சுப்பிரமணியருக்கு அர்ச்சகர் அடுக்கு தீபாராதனை காட்டுவது போன்றும், கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர்கள் ஆகியோர் அடங்கிய தொகுப்புச் சிற்பம் ஒன்றும் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு மண்டபக் கொடுங்கையின் மேற்புறம் சிவலிங்கம், தேவி, தீபாராதனை காட்டும் அர்ச்சகர், கொடிமரம், நந்தி, பலிபீடம், இரண்டு பக்தர் சிலைகளையும் கண்டு வியக்கலாம். கருவறையின் மேல்புறத்தில் உள்ள அகலமான விமானத்தின் பீடத்தில் யாளி வரிகளும், பூதவரிகளும் உள்ளன. முன் மண்டபம், மகா மண்டபம் மற்றும் திருச்சுற்றிலும் கைகூப்பிய நிலையில் பல்வேறு அரசர்கள், தனவந்தர்கள் சிலைகளைக் காண முடிகிறது.