அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில்
கழுத்தில் கபால மாலை அணிந்து காட்சி தரும் கால பைரவர்
கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்கும் தனிச்சிறப்பு
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 79 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் அச்சிறுபாக்கம் ஆட்சீசுவரர் கோவில். இக்கோவிலில் ஆட்சிபுரீஸ்வரர் , உமையாட்சீஸ்வரர் என இரண்டு மூலவர்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்கள். இளங்கிளியம்மை, உமையாம்பிகை என இரண்டு அம்மன்கள் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கிறார்கள்.
இக்கோவிலில் இருக்கும் கால பைரவர் வித்தியாசமான கோலத்தில் காணப்படுகிறார். மிக சிறிய உருவ தோற்றத்துடன் இருக்கும் இந்த கால பைரவர் கழுத்தில் ஆளுயர கபால மாலை அணிந்து காட்சி தருகிறார். பொதுவாக சிவாலயங்களில் கால பைரவர் தெற்கு அல்லது வடக்கு நோக்கி எழுந்தருளி இருப்பார். ஆனால் இத்தலத்தில் கால பைரவர் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இத்தகைய நிலையில் இருக்கும் கால பைரவரை, நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.
இவரை வழி பட்டால் கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தொழில் தொடங்கும் முன்பும் இவரை வழிபட வேண்டும். எதிரிகள் தொல்லை நீங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் இவரை வழிபட்டால் பலன் கிடைக்கும்.