
பலாசவனேஸ்வரர் கோவில்
பலாப்பழம் போன்ற திருமேனியை உடைய சிவலிங்கம்
தஞ்சை மாவட்டம் திருச்சேறை அருகே உள்ளது நாலூர். இத்தலத்து இறைவன் பெயர் பலாசவனேஸ்வரர். இங்கு உள்ள சுயம்பு லிங்கத்தின் மேற்பகுதி பலாபழம் போன்று முள்ளுமுள்ளாக உள்ளது. இத்தலம் தேவார வைப்புத்தலமாகும். தேவார வைப்புத் தலங்கள் என்பவை தேவாரத்தில் தனிப்பாடல்களாகப் பாடப்பெறாமல், வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் குறிப்பிடப்படும் தலங்களாகும்.

அர்த்தநாரீஸ்வரர் கோவில்
இனிப்பு,புளிப்பு என இரட்டை சுவையுடன் விளங்கும் தலவிருட்சம்
தென்காசிக்கு அருகில் உள்ள வாசுதேவநல்லூர்.அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சிவபெருமானும் பார்வதியும் இணைந்து அர்த்தநாரீஸ்வர கோலத்தில் காட்சி கொடுக்கிறார்கள், புளிய மரங்கள் நிறைந்த வனத்தில் சிவன் காட்சி தருவதால், சிந்தாமணிநாதர் என்று அழைக்கப்படுகிறார். புளிய மரத்திற்கு சிந்தை மரம் என்றும் பெயர் உண்டு. இத்தலத்தின் விருட்சமும் புளியமரம் ஆகும். இம்மரத்தின் பழங்கள் இனிப்பு, புளிப்பு என இரட்டைச் சுவையுடன் இருப்பது சிறப்பம்சம். பிரிந்திருக்கும் தம்பதியர் இங்கு வேண்டிக்கொள்ள, மீண்டும் இணைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நீலகண்டேஸ்வரர் கோயில்
அபிஷேக எண்ணெயை உறிஞ்சும் அதிசய சிவ லிங்கம்
தஞ்சை மாவட்டம் திருநீலக்குடியில் உள்ளது தேவாரப்பாடல் பெற்ற நீலகண்டேஸ்வரர் திருக்கோவில். இங்குள்ள சிவனுக்கு நல்லெண்ணெய் கொண்டு பிரத்யேகமாக அபிஷேகம் நடக்கிறது. தினமும் பாத்திரம் பாத்திரதமாக எவ்வளவு எண்ணெயை ஊற்றினாலும் அவ்வளவு எண்ணெயையும் இங்குள்ள சிவ லிங்கம் தன்னுள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. அடுத்தநாள் மீண்டும் அபிஷேகம் செய்வதற்கு முன்பு சிவ லிங்கத்தை பார்த்தால், பல வருடங்களாக எண்ணெயே தடவாதது போல் மிகவும் வறண்டு காணப்படுகிறது. சிவபெருமான் அருந்திய ஆலகால விஷம் அவர் தொண்டையிலேயே தங்கி இருப்பதால்,அந்த விஷத்தன்மையை குறைக்கவே இவருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம்

ரிஷபேஸ்வரர் கோவில்
தங்க நிறமாக மாறும் நந்தி
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற ஊரில், ரிஷபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது, சூரிய ஒளிக்கதிர்கள் இராஜ கோபுரத்தின் மேல் பட்டு நந்தியின் மேல் விழும். அப்படி சூரிய ஒளி விழும் சில நிமிடங்கள், நந்தி தங்க நிறமாக மாறி காட்சியளிக்கும்.

கடம்பவனேசுவரர் கோயில்
கருவறையில் சிவபெருமானுடன் காட்சி தரும் சப்த கன்னியர்கள்
பொதுவாக சப்த கன்னியர்களுக்கு கோவில்களில் உபசன்னதி அமைந்திருக்கும். சில இடங்களில் சப்த கன்னியர்களுக்குத் தனியாக கோவில் அமைந்திருக்கும். ஆனால், கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனநாதர் கோவிலில், சப்த கன்னியர்கள் மூலவர் கடம்பவனநாதரின் பின்புறம் அமர்ந்திருக்கிறார்கள். இதுபோல மூலஸ்தானத்தில் சப்த கன்னியர்கள் மற்ற தெய்வங்களுடன் இருப்பது போன்ற அமைப்பு வேறு எங்கும் காண முடியாது.
பாடலீஸ்வரர் கோவில்
சிவன் சன்னதியில் பள்ளியறை
அனைத்து சிவ ஆலயங்களிலும், அம்பாள் சன்னதியில்தான பள்ளியறை அமைந்திருக்கும். ஆனால் தேவாரப் பாடல் பெற்ற திருப்பாதிரிப்புலியூர் (கடலூ்ர்) சிவாலயத்தில் பள்ளியறை சிவன் சன்னதியில் உள்ளது, இங்கு மற்ற ஆலயங்களைப் போல சுவாமி அம்மனின் சன்னதியிலுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்வதற்கு பதிலாக, அம்மன் தானே சிவன் சன்னதியி லுள்ள பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.
கபாலீசுவரர் கோயில்
இரண்டு கொடிமரங்கள் அமைந்த தேவாரத்தலம்
பொதுவாக ஆலயங்களில் ஒரு கொடிமரம்தான் இருக்கும்.ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்,சுவாமி சன்னதிக்கு எதிராக ஒரு கொடிமரமும் சிங்காரவேலர் சன்னதிக்கு எதிராக மற்றொரு கொடிமரமும் என இரண்டு கொடிமரங்கள் அமைந்துள்ளன.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
கால் மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்
நடராஜப் பெருமான் பொதுவாக தன் வலது காலை முயலகன் மீது ஊன்றி இடது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில் தான் எல்லா சிவாலயங்களிலும் காட்சி தருவார்.ஆனால் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில், ஒரு பாண்டிய மன்னன் ஒரே காலில் நிற்பது நடராஜப் பெருமானுக்கு வலிக்குமே என்று ஆதங்கப் பட்டதால்,தன் இடது காலை முயலகன் மீது ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடும் கோலத்தில், வெள்ளியம்பலத்தில் காட்சி தருகிறார்.

தில்லை நடராசர் கோயில்
சிதம்பரத்து பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் உள்ள ஒற்றுமைகள்
சைவ உலகில் கோவில் என்றால் அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். சிவபெருமானின் ஐந்து சபைகளுள் ஒன்றான பொற்சபை உள்ள தலம்.
பஞ்ச பூதத் தலங்களுள் ஆகாயத் தலம்.பொன்னம்பலத்தில் சிவபெருமான் நடராசர் திருக்கோலத்துடன் காட்சி தருகிறார்.
இந்த பொன்னம்பலத்திற்கும் நமது உடலுக்கும் ஒற்றுமைகள் உள்ளன. பொன்னம்பலத்தின் மேலே உள்ள ஒன்பது தங்கக் கலசங்கள் 9 சக்திகளைக் குறிக்கின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள 64 மரத்துண்டுகள் 64 கலைகளையும், இதில் வேயப்பட்டுள்ள 21,600 ஓடுகள் ஒரு நாளில் நாம் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றினையும், இவற்றில் அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள் நம் உடலில் உள்ள நரம்புகளின் எண்ணிக்கையையும் குறிக்கும். இக்கோயிலில் மட்டும் கருவறை இடதுபுறம் உள்ளது. அதேபோல் நமது உடம்பில் இதயம் இடப்புறத்தில்தான் உள்ளது.
சகல தீர்த்தமுடையவர் கோவில்
விசேடத் தீர்த்தம்
இராமநாதபுர மாவட்டம் தொண்டியிலிருந்து 15 கீ.மீ. தொலைவிலுள்ள தலம்தான் தீர்த்தாண்டதானம். இத்தலத்து இறைவன் சகல தீர்த்தமுடையவர்.இறைவி பெரியநாயகி. இத்தலத்து தீர்த்தமான கடலில் நீராடி பின்னர் இறைவனை வழிபட்டால் 64000 தீர்த்தங்களில் நீராடிய புண்ணியமும், பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.