
மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில்
சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாக காட்சி தரும் அபூர்வ அம்மன்
விளைச்சலுக்கு அருள் வழங்கும் தலம்
கும்பகோணம் -மயிலாடுதுறை பாதையில் ஆடுதுறையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் (சூரியனார் கோவிலுக்கு அருகில்) உள்ளது மணலூர் ஏழுலோகநாயகி அம்மன் கோவில். பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். இப்பகுதி மக்களுக்கு காவல் தெய்வமாக ஏழுலோகநாயகி விளங்குகிறாள். ஊருக்கு வெளியில், வயல்வெளிகளுக்கு இடையே இந்த அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனின் சிலை ஒரு தாமரை குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.அம்மனின் விருப்பத்திற்கு இணங்க, உரல், உலக்கை ஒலி இல்லாத இடத்தில், அதாவது ஊருக்கு வெளியில் அம்மனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த அம்மனின் திருவுருவம் பிராம்மி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டா என்று அழைக்கப்படும் சப்தமாதர்களின் ஒன்று சேர்ந்த உருவமாகும். அதனால்தான் இந்த அம்மனுக்கு ஏழுலோகநாயகி என்ற திருநாமம் ஏற்பட்டது.
கருவறையில், ஏழுலோகநாயகி அம்மன் உயரமான திருமேனியுடன் வலது காலை மடித்தும், இடது காலை தொங்கவிட்டும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். எட்டுத் திருக்கரங்களிலும் சூலம், வேதாளம், கத்தி, உடுக்கை, கபாலம், மணி, உலக்கை முதலிய ஆயுதங்களை ஏந்தி, தலையை சற்று சாய்த்து, கண்களில் கருணை பொங்க தோற்றம் அளிக்கின்றாள்.
இக்கோவில் விளைச்சலுக்கு அருள் வழங்கும் ஒரு சிறப்புமிக்க தலமாகப் போற்றப்படுகிறது.