திருக்கோழம்பியம் கோழம்ப நாதர் கோவில்
அம்பிகை பசுவாக அவதரித்து தவம் செய்த தேவாரத் தலம்
சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்த தலம்
மயிலாடுதுறை–கும்பகோணம் சாலையில் ஆடுதுறையிலிருந்து தெற்கே 8 கி.மீ. (திருவாவடுதுறையிலிருந்து கிழக்கே 5 கி.மீ) தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருக்கோழம்பியம். இறைவன் திருநாமம் கோழம்ப நாதர், கோகிலேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தர்ய நாயகி. 1800 ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது.
அம்பிகை உலகில் சிவபூஜையின் பெருமையை எடுத்துரைக்க, பசுவாக அவதரித்து தவம் செய்த இடம் என்பதே இந்தத் தலத்தின் சிறப்பு. இந்த நிகழ்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில், இங்குள்ள சிவலிங்கத்தின் ஆவுடையார் மேல் பசுவாக வந்த அம்பிகையின் குளம்படி பதிந்து இருக்கின்றது. இத்தலத்து சிவலிங்கத் திருமேனி நீண்ட பாணத்தை உடையதாக இருக்கின்றது. பிரம்மனுக்காக பொய் சாட்சி சொன்ன தாழம்பூ சாப விமோசனம் பெற்ற தலம் இது. அதனால் இங்கு தாழம்பூ, சிவபூஜைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பித்ரு தோஷ நிவர்த்திக்கு காசி, கயா போன்ற புண்ணிய தலங்களுக்கு ஈடான தலம் இது.
அம்பிகை சௌந்தர்ய நாயகி 5 1/2 அடி உயரத்தில் பத்ம பீடத்தில் நின்ற கோலத்தில், அபய வரத ஹஸ்தங்களுடன், அட்சர மாலை, கமண்டலத்தைத் தாங்கி தோற்றமளிக்கிறாள். திருமாலுடன் சொக்கட்டான் விளையாடிய தருணத்தில் சிவபெருமானுக்கு ஏற்பட்ட சந்தேகத்தில், பார்வதி தனது சகோதரனுக்காகப் பரிந்து பேசியதால், சிவபெருமானின் சாபத்துக்கு ஆளாகி பூமியில் பசுவாகப் பிறந்தார். சாப நிவர்த்திக்காக, திருவாவடுதுறை அருகே மேய்ந்த அந்தப் பசு அருகிலுள்ள திருக்கோழம்பியத்தில் சிவபெருமானை வழிபட்டது. அங்கு அதன் குளம்பு லிங்கத்தின் மீது தவறுதலாக இடறியது. அதன் அடையாளம் இன்றும் ஆவுடையார்மேல் பதிந்துள்ளதைக் காணலாம். தமிழில் 'குளம்பு' என்றால் 'கொழுமம்' என்று பொருள். அதன்பொருட்டு இத்தலத்துக்கு 'கோழம்பம்' என்றும், இறைவனுக்கு 'கோழம்பநாதர்' என்றும் பெயர் ஆயிற்று.
இக்கோவிலில் 27 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் 'வ்யதிபாதயோக' பூஜை ஹோமங்களில் பங்கேற்றால் திருமணத் தடைகள் நீங்கும், புத்திரப் பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.