வெற்றி வேலாயுதசாமி கோவில்
முருகப்பெருமான் தன் வேலால் உருவாக்கிய தீர்த்தம்
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டத்தில் புகழ் பெற்ற கதித்தமலை அமைந்துள்ளது.இது கைத்தமலை என்றும் கதிர்த்தமலை என்றும் அழைக்கப்படுகிறது. கதித்த என்னும் சொல்லுக்கு கோபித்த என்ற பொருளும் உண்டு. அம்மையப்பனாகிய பெற்றோரிடம் ஞானப்பழத்தை பெறாத முருகன் அவர்களிடம் கோபித்துக்கொண்டு இங்கு வந்ததால் (கோபித்தமலை) கதித்தமலை என்று ஆயிற்று. கதித்தமலை மயில் வடிவில் உள்ளதால், மயூரகிரி என்றும் அழைக்கப்படுகிறது.
இங்கு வெற்றி வேலாயுதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் மலையின் மீது ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் உள்ளே நுழைந்தவுடன் ஒரு அழகிய மண்டபத்துடன் கூடிய சன்னதியில் முருகன் தனியாக காட்சிதருகிறார் . வள்ளி மற்றும் தெய்வானைக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
அகத்தியர் முனிவர், முருகப் பெருமானை வழிபடஇத்தலத்திற்கு வந்தார். ஆனால் அவர் பூஜை செய்வதற்கான நீர் கிடைக்காததால் வருத்தமுற்றார். அவர் மனம் உருகி முருகப்பெருமானை வேண்ட, முருகப்பெருமான், தன வேலால் இவ்விடத்தில குத்த நீர் வந்தது. அதைக்கொண்டு அகத்தியர் பூஜை செய்தார். அவ்வாறு முருகப்பெருமான் குத்திய இடத்தில இருந்து நீர் இன்றும் வற்றாமல் வந்து கொண்டே இருக்கிறது . குழியில் இருந்து ஊற்று தோன்றியதால் 'ஊத்துக்குளி' என்று இவ்விடத்திற்கு பெயர் ஏற்பட்டது .
அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் .
முருகய்யனார் கோவில்
பாம்பின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் முருகன்
விருதுநகர் மாவட்டம் நரிக்குடிக்கு அருகேயுள்ள வீரக்குடியில் அமைந்துள்ளது முருகய்யனார் கோயில். பச்சைப் பசேலென்ற வயல் வெளிகளுக்கு இடையே அமைந்துள்ள இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது. இத்தல மூலவர் முருகைய்யா பாம்பின் மீது அமர்ந்தவாறு உள்ளது தனிச்சிறப்பாகும். கண்மாய்க் கரையில் எழுந்தருளி உள்ளதால் கரைமேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
முன்னொரு காலத்தில் ஒரு பெண்மணி வீரக்குடியில் பால் வியாபாரம் செய்து வந்தாள். வீரக்குடியிலிருந்து பாலினை, அவர் கண்மாய்க் கரை வழியாய் வியாபார்ததிற்கு எடுத்துச் செல்லும் போது வள்ளிக் கொடியில் கால் இடறி பால் சிந்தியது. தற்செயலாக நடந்தது என்று நினைத்து வி்ட்டுவிட்டாள், ஆனால் இது தொடர்ந்து நிகழ்ந்தது. அதனால் தனது வியாபாரம் பாதிக்கப்படுவதைக் கண்டு கோபத்தால் ஒரு கோடரியை வைத்து அக்கொடியை வெட்டினாள். அதிலிருந்து ரத்தம் பீரிட்டுவர பயந்து ஊருக்குள் ஓடினாள். அங்கிருந்தவர்களின் துணையோடு அவ்விடத்திற்கு வந்தாள், அக்கூட்டத்திலிருந்த பெரியவர் அங்கு தோண்டிப் பார்க்கும் படி கூற அங்கு முருகன் சிலை கிடைத்தது. பின்னர் முறைப்படி ஆலயம் கட்டி அதில் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.
இரத்த சிவப்பு நிறத்தில் காணப்படும் மண்
வள்ளிக் கொடியிலிருந்து இரத்தம் வந்த இடத்தினை வீரத்திடல் என்று இன்றும் அழைக்கப்பட்டு வரும் இடத்தில் மற்ற பகுதி மண்ணைவிட இங்குள்ள மண் இரத்த நிறத்தில் காணப்படுவது அதிசயம்.
பிரசித்தி பெற்ற மகா சிவராத்திரி விழா
சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பிரச்சனைகள் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் முதலிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக மகாசிவராத்திரியன்று வெளி ஊர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து இத்தல முருகனை வழிபடுகிறார்கள்.
சுவர்ணபுரீஸ்வரர் கோவில்
தாய்க்கு உபதேசம் செய்த முருகன்
தன் தாய் பார்வதிக்கு உபதேசம் செய்த முருகன், செம்பொனார் கோவிலில் அருள் பாலிக்கின்றார். இத்தலம் மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் சுவர்ணபுரீஸ்வரர், இறைவியின் திருநாமம் சுகந்த கும்பளாம்பிகை.ஒருமுறை சிவனின் பேச்சையும் மீறி பார்வதி, தன் தந்தையான தட்சன் நடத்திய யாகத்தில் பங்கேற்றாள். இதனால் சிவனின் கோபத்திற்கு ஆளானாள். குடும்ப நிம்மதிக்கு ஒற்றுமை அவசியம் என்பதை உணர்த்தும் விதத்தில் தாய் பார்வதிக்கு உபதேசித்தார் முருகன். மனம் திருந்திய அவள், அக்னியின் நடுவில் அமர்ந்து தன் குணத்தை மாற்ற தவமிருந்தாள். இதற்காக அவள் தேர்ந்தெடுத்த தலமே செம்பொனார் கோயில். செம்பொன் என்பதற்கு 'துாய தங்கம்' என்பது பொருள். தவத்தின் முடிவில் தங்கம் போல் மாசு மருவற்றவளாக வெளி வந்து சிவபெருமானுடன் இணைந்தாள். உபதேசித்ததை குறிக்கும் விதமாக முருகன் அட்சர மாலையுடன் இருக்கிறார்.சிறந்த கணவர் கிடைக்க பெண்கள் இங்கு வழிபடுகின்றனர். திருமாலை அடைய லட்சுமியும், மன்மதனை அடைய ரதியும் வழிபட்டனர். சித்திரை 7 முதல் 18 வரை சிவனை வழிபடும் விதத்தில் சூரியக்கதிர்கள் மூலவர் மீது விழுகிறது. இதனை 'சூரியத் திருவிழா' என்கின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
போர் வீரன் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்
மதுரையில் இருந்து 36 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உசிலம்பட்டிக்கு அருகில் (சுமார் 2 கி.மீ.) அமைந்திருக்கிறது புத்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில். இப்பகுதியில் பாம்பு புற்றுகள் நிறைந்திருந்ததால் 'புத்தூர்' என்ற பெயர் ஏற்பட்டது. பல நூற்றாண்டுகளுக்கு முன், நாகாசுரன் என்ற கொள்ளையன் இப்பகுதி மக்களைத் துன்புறுத்தி வந்தான். இப்பகுதியை ஆண்ட மன்னரால், அவனை அழிக்க முடியவில்லை. முருக பக்தரான அம்மன்னர், அவனை அழிக்கும்படி முருகனிடம் முறையிட்டார். ஒருமுறை நாகாசுரன் மக்களின் உடைமைகளைச் சூறையாடினான். அப்போது, முருகப்பெருமான் ஒரு இளைஞனின் வடிவில் காலணி மற்றும் வீரதண்டை அணிந்து, வாள் மற்றும் கத்தியுடன் அங்கு போர் வீரன் கோலத்தில் வந்து அவனைத் தடுத்தார். கோபமடைந்த நாகாசுரன், அவரைத் தாக்க முயன்றான். முருகன் அவனை வீழ்த்தினார். மக்கள் தங்களைக் காத்த இளைஞனை மன்னரிடத்தில் கூட்டிச் சென்ற போது, அவர் மறைந்து விட்டார். தான் வணங்கிய முருகப்பெருமானே இளைஞனாக வந்து, நாகாசுரனை அழித்தார் என்பதை உணர்ந்த மன்னர், இவ்விடத்தில் அவருக்கு கோயில் கட்டினார்.கோவில் கருவறையில்m மூலவர் சுப்பிரமணியர் போர் வீரன் கோலத்தில், இடுப்பில் கத்தி, பாதத்தில் காலணி, காலில் போர் வீரர்கள் அணியும் தண்டை அணிந்து காட்சி தருகிறார். இத்தகைய முருகனின் கோலம் வேறு எந்த தலத்திலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். முதலில் சுப்பிரமணியர் உக்கிரமாக இருந்தார். திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் இவரது உக்கிரத்தைக் குறைப்பதற்காக இவருடன் வள்ளி, தெய்வானையைப் பிரதிஷ்டை செய்தனர். அப்போது முருகனின் கையில் இருந்த வில்லுக்கு பதிலாக வேலைப் பிரதிஷ்டை செய்தனர். பயந்த சுபாவம், மனக்குழப்பம் உள்ளவர்கள், அக்குறை நீங்க இத்தல முருகனைப் பிரார்த்திக்கிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப்பெருமான் சிவபூஜை செய்த தலம்
சென்னை தாம்பரத்திலிருந்து 16 கி.மீ., பல்லாவரத்தில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் குன்றத்தூர் உள்ளது. குன்றுடன் அமைந்த ஊர் என்பதல் இத்தலம் குன்றத்தூர் என்று அழைக்கப்படுகிறது. 84 படிகள் கொண்ட குன்றின் மீது சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்திருக்கிறது. திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வென்ற முருகப்பெருமான், சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். வழியில் சிவபூஜை செய்ய எண்ணினார். இங்கு ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்தார். அப்போது இக்குன்றில் சிறிது நேரம் சிவனை வேண்டி தியானித்துவிட்டுச் சென்றார். பிற்காலத்தில் இப்பகுதியை குலோத்துங்க சோழ மன்னன், ஆட்சி செய்தபோது குன்றின் மீது முருகனுக்கு கோவில் கட்டப்பட்டது.முருகனால் பூஜிக்கப்பட்ட சிவன், மலைக்கு அடிவாரத்தில் 'கந்தழீஸ்வரர்' என்ற பெயரில், தனிக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். கந்தனால் வழிபடப்பட்டவர் என்பதால் இவருக்கு இப்பெயர்.இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் என்ற வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. சுப்பிரமணியருக்கு அபிஷேகம் செய்த விபூதியையே, பிரசாதமாக தருகின்றனர். பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
ஆங்கிலேய கலெக்டர் உணர்ந்த திருச்செந்தூர் முருகனின் தெய்வீக சக்தி
1803ம் ஆண்டில் ஆங்கிலேய கலெக்டராக திருநெல்வேலியில் பணிபுரிந்த லூசிங்க்டன் துரை, ஒரு முறை திருச்செந்தூருக்கு வந்தார். அப்போது முருகனுக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வழிபாடுகளைக் கண்டார். அதில் முருகனுக்கு அளிக்கப்படும் சோடச உபசாரம் எனப்படும் 16 வகை உபசாரங்களைக் கண்டார். அதில் வெள்ளி விசிறியால் முருகனுக்கு வீசுதலும் ஒன்றாகும்.இதைப் பார்த்த லூசிங்க்டன் துரை, 'உங்கள் கடவுளுக்கு வியர்வை உண்டாகிறதோ' எனக், கேலி செய்து சிரித்தார். இதைக் கவனித்த அர்ச்சகர்கள், 'ஆமாம். எங்கள் சண்முகனுக்கு வியர்க்கும்' என்றார்கள். பின்னர் லூசிங்க்டன் துரைக்கு முருகப் பெருமானின் சிறப்பை உணர்த்தும் விதத்தில் முருகப் பெருமானின் மேலிருந்த மாலைகளை எடுத்து விட்டு ஒரு புதிய துணியை முருகப் பெருமானின்மேல் போர்த்தினார்கள். கொஞ்சநேரத்தில் முருகப்பெருமான்மீது வியர்வை உருவாகி அந்த துணி முழுவதும் நனைந்தது. வியர்வை அதிகமாகி அது தரையிலும் ஓட ஆரம்பித்தது.இதற்குக் காரணம், திருச்செந்தூர் கோவில் முருகன் விக்ரகம் எப்போதும் மிகவும் சூடாக இருக்கும். சூரபத்மனை வதம் செய்வதற்காக கோபத்தில் முருகன் இருந்ததால், அவர் திருமேனி எப்போதும் வியர்த்தவாறு இருக்கிறது அதனால் அர்ச்சகர்கள் சந்தனைத்தை அரைத்து அதில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்றாக வடிகட்டி அதனை, காலை நேரத்தில் முருகன் விக்ரகம் மீது முழுவதுமாக பூசி மூடி விடுவார்கள். விக்ரகத்தில் இப்படி பூசப்பட்டிருக்கும் சந்தனம், மாலை நேரத்தில் ஈரத்தினால் சொத சொதவென சிலை முழுக்க வழிந்து இருக்கும்.முருகப்பெருமானின் விக்ரகத்தில் திட்டு திட்டாக வியர்வை அரும்பியிருப்பதைக் கண்டு லூசிங்டன் வியந்தர். வீடு திரும்பிய லூசிங்டன் கலெக்டருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவிக்கு திடீரென கடுமையான வயிற்று வலியால் துடிதுடித்தார். தான் முருகனின் வழிபாட்டை ஏளனம் செய்ததாலேயே `தனக்கு இப்படி ஏற்பட்டதாக உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியாமல், தன்க்கு கீழே வேலை பார்க்கும் முருக பக்தர் ஒருவரிடம், முருகனின் கோபம் தணிய என்ன செய்ய வேண்டும் என கேட்டார். அவர் கூறிய யோசனையினபடி, முருகப்பெருமானிடம் தான் செய்தது தவறு, என்னை மன்னித்து என் மனைவியை காப்பாற்று. அப்படி செய்தால் நான் என் சொந்த செலவால் உன் ஆலயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி தருகிறேன் என வேண்டினார். முருகனிடம் வேண்டி விட்டு வீடு திரும்பிய லூசிங்டன் பிரவு, மனைவியின் வயிறு வலி நீங்கியிருந்ததைக் கண்டு அதிசயித்துப் போனார். உடனே அவர் முருகனுக்கு வேண்டிக் கொண்டபடி வெள்ளிப் பாத்திரத்தை கோவிலுக்கு காணிக்கையாகக் கொடுத்தார்.அவர் கொடுத்த வெள்ளிப் பாத்திரம் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 'லூசிங்க்டன் 1803' என்று பொறித்திருப்பதை நாம் காண முடியும்.
சுப்ரமணிய சுவாமி கோவில்
இரண்டு அடுக்கு கொண்ட முருகன் கோவில்
திண்டுக்கல் மாவட்டம் திருமலைக்கேணி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் இரண்டு அடுக்காக அமைந்து இருக்கிறது.இந்தக் கோயிலைப் புதுப்பிக்கும்போது பழைய சிலையை எடுக்க முடியவில்லை.அதனால் பழைய முருகன் சிலை இருந்த இடத்தில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு மேல் புதிதாக ஒரு கோயிலை நிர்மாணித்து அதில் புதிதாக ஒரு முருகன் சிலையை பிரதிஷ்டை செய்திருக்கிறார்கள்.இவ்வாறு கீழே ஒரு முருகன், மேலே ஒரு முருகன் என இரண்டடுக்காக இக்கோவில் அமைந்திருக்கிறது. மேலடுக்கிலுள்ள பிரதான மூலஸ்தானத்தில் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தம், கீழ் அடுக்கிலுள்ள ஆதிமுருகன் மீது விழும்படியாக இந்த சன்னதியை அமைத்துள்ளனர். இதற்காக முருகன் பாதத்திற்கு கீழே, ஒரு துளையும் உள்ளது. இத்தலத்தில் முருகன் பாலகனாக தனித்து இருந்து அருள்புரிகிறார்.உடன் வள்ளி, தெய்வானை கிடையாது. முருகன் சன்னதிக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை தீர்த்தங்கள் உள்ளது. இந்த தீர்த்தங்களின் வடிவில் முருகனின் தேவியர்கள் அருளுவதாகச் சொல்கிறார்கள். வள்ளி தீர்த்தம் கிணறு வடிவில் இருக்கிறது. மலையின் மத்தியில் உள்ள கிணறு என்பதால் இதன் பெயரால் தலம், “மலைக்கேணி” (கேணி – கிணறு) என்று பெயர் பெற்றது.
வெற்றிவேல் முருகன் கோவில்
வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் தலம்
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, ஜலகாம் பாறை . வெற்றிவேல் முருகன் கோவில். ஜலகாம் பாறை, ஏலகிரி மலையினை ஒட்டியுள்ளது. சிவலிங்க வடிவில் உள்ள இந்த முருகன் கோவிலில் விக்கிரகம் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் இருக்கிறது. வேல் வடிவில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயமிது.
வியாழ சோமேஸ்வரர் கோவில்
முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தரும் தலம்
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலை ஒட்டி அமைந்துள்ளது. வியாழ சோமேஸ்வரர் கோவில். நவக்கிரகங்களில் சுப கிரகமாக வர்ணிக்கப்படும் குருபகவான் வழிபாடு செய்த சிறப்புமிக்க ஆலயம் என்பதால், இத்தல இறைவன் 'வியாழ சோமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். சோமன் எனப்படும் சந்திரன் வழிபட்டதால், இத்தல இறைவனுக்கு 'சோமேஸ்வரர்' என்று பெயர். குரு மற்றும் சந்திர தோஷம் இருப்பவர்கள், இந்த ஆலயத்தில் உள்ள சோமேஸ்வரரை வழிபட்டால் தோஷங்கள் விலகி நன்மைகள் வந்தடையும்.இத்தலத்து முருகப்பெருமான் மயில் மீது அமர்ந்து ஒரு காலை மடித்து மற்றொரு காலை தொங்கவிட்ட நிலையில் காட்சி தருகிறார் அவர் தொங்க விட்ட நிலையில் இருக்கும் காலில் பாதரட்சை அணிந்து இருக்கிறார். முருகப்பெருமானின் இத்தகைய கோலத்தை வேறு எந்த தலத்திலும் காணமுடியாத.
வேலாயுதசுவாமி கோவில்
மூலவர் முருகப்பெருமான் வேலுடன் காட்சி தரும் அரிய கோலம்
கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோவிலில், மூலவர் முருகப்பெருமான் கையில் வேலுடன் காட்சி தருகிறார். மூலவரின் இத்தகைய தோற்றம் வேறு எந்த தலத்திலும் காண்பதற்கு அரிது. இத்தலம் கோவையிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.சில நூற்றாண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியை அடுத்துள்ள புரவிபாளையத்தில் ஜமீன்தார் ஒருவர் வசித்து வந்தார். சிறந்த முருக பக்தரான இவர், அடிக்கடி பழனிக்குச் சென்று முருகனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு முறை, ஜமீன்தார் விரதமிருந்து பழநி சென்றார். பழநி அருகிலுள்ள ஆயக்குடி ஜமீனில் இவரை விருந்துக்கு அழைத்தனர். ஆயக்குடி சென்ற இவர், பழநி முருகனை தரிசிக்காமல் விருந்துண்ண மாட்டேன் என்று கூறிவிட்டு ஏதோ காரணத்தால், பழனி முருகனை தரிசிக்காமல், புரவி பாளையத்திற்கே திரும்பிவிட்டார். பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே என்ற கவலையினாலேயே ஜமீன்தாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவு, ஜமீன்தாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி, கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட கிணத்துகடவு பொன்மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக்கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார். மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலைமீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் 'வேலாயுத சுவாமி' என அழைக்கப்பட்டார்.பெற்றோரிடம் போபித்துக்கொண்டு பழநியில் குடி கொண்ட முருகப்பெருமான், இந்த கிணத்துக்கடவு பொன்மலையில் பாதம் பதித்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. எனவே இங்கு மூலஸ்தான முருகனுக்கு பூஜை நடத்தும் முன்பாக, பாறையிலுள்ள முருகனின் பாதத்திற்கே முதல் பூஜை செய்யப்படுகிறது.அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கனககிரி’ என்று பாடி இருக்கிறார். 'கனக' என்பது பொன்னையும் 'கிரி' என்பது மலையையும் குறிக்கும். .திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க பக்தர்கள் வேலாயுத சுவாமியை வேண்டிக் கொள்கிறார்கள்.
வெற்றிவேல் முருகன் கோவில்
கடவுள் நம்பிக்கை அற்றவரை காப்பாற்றிய முருகப்பெருமான்
சிதம்பரம் பிச்சாவரம் சாலையில் அமைந்துள்ள கிள்ளை என்ற ஊரில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சி.மானம்பட்டி என்னும் ஊரில் அருள்பாலிக்கிறார் வெற்றிவேல் முருகன். இவர் வள்ளி தெய்வானை உடனின்றி, தனித்து மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.பல ஆண்டுகளுக்கு முன் சி.மானம்பட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவர் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். மருத்துவர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை. அவரது குடும்பத்தினரிடம் அவர் உயிர் பிழைக்க வழியில்லை என்று கூறி விட்டனர். மரணத்தருவாயில் இருந்த அவருக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட கிடையாது. ஆனால் அவருக்கு முருகனின் அருட்கடாட்சம் கிடைத்தது. படுக்கையில் இருந்த அவருக்கு திடீரெனமயில் மீது முருகன் காட்சி தருவதைப் போல உணர்ந்தார். அந்தக் காட்சியைக் கண்டவுடன் நோயிலிருந்து பூரண குணமடைந்த அவர் குடும்பத்தினரிடம், நான் குணமாகிவிட்டேன். எனக்கு மிகவும் பசிக்கிறது சீக்கிரம் சாப்பாடு கொடுங்கள் என்று கூறி படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து கொண்டார். குடும்பத்தினருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. சில நாட்களில் அவர், தாம் கண்ட முருகனை, அதே வடிவத்தில் சிலை வடித்துக் கோயில் எழுப்பினார். அவரே இங்கு வெற்றிவேல் முருகனாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை நீங்க நடத்தப்படும் வினோதமான சடங்கு
திருமணத்தடை உள்ளோருக்கு இங்கு 'வெற்றிலை துடைப்பு' என்னும் சடங்கு நடக்கிறது. இவர்களை கொடிமரம் அருகில் அமர வைத்து, கையில் சுவாமிக்குப் பூஜித்த வெற்றிலையைக் கொடுக்கின்றனர். பின், சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை வெற்றிலையில் தெளிக்கின்றனர். பக்தர்கள் அந்த வெற்றிலையால் தம் முகத்தைத் துடைத்துக்கொண்டு, முருகனைத் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மங்கலப்பொருட்களில் ஒன்றான வெற்றிலையை முகத்தில் துடைப்பதால், கெட்ட சக்திகள் விலகி, நன்மை பிறக்கும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
கல்லால் ஆன கொடிமரம் அமைந்திருக்கும் முருகன் கோவில்
பொதுவாக கோவில்களின் கொடிமரம் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். ஆனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ராஜ கோபுரத்தை தாண்டி நாம் உள்ளே சென்றால், முதலில் கல்லாலான கொடிமரத்தை காண முடியும். இது ஒரு வித்தியாசமான அமைப்பாகும். இக்கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அவர்முன் வைக்கப்பட்டுள்ள பெரிய மயில்முக குத்துவிளக்கு,மிக்க கலைநயத்துடன் விளங்குகின்றது. மயில்முக விளக்கின் அடிப்புற ஆமை வடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.
சண்முக நாதர் கோவில்
முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் திருப்புகழ் தலம்
திருச்சி மதுரை சாலையில் சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது விராலிமலை சண்முக நாதர் கோவில்.ஒருகாலத்தில், கருப்புமுத்து எனும் பக்தர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார். ஒருநாள், பலத்த மழை பெய்யவே. கருப்புமுத்துவால் ஆற்றைக் கடந்து கோயிலுக்கு வரமுடியவில்லை. குளிரில் நடுங்கியபடி, முருகப்பெருமானை தரிசிக்க முடியவில்லையே என்று வருத்தமுடன் இருந்தார். குளிருக்கு இதமாக இருக்கும் என்று நினைத்து சுருட்டு ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து, உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். பின்னர் காணாமல் போய்விட்டார். கருப்பமுத்து கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தபோது சன்னதியில் பாதி சுருட்டு இருந்தது கண்டு திகைத்துப் போனார். கருப்பமுத்து ஊர்மக்களிடம் நடந்ததைக் கூற அனைவரும் ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் ஏற்பட்டு விட்டது.பின்னர் இடைக்காலத்தில் புதுக்கோட்டை மகாராஜா இப்பழக்கத்திற்கு தடை விதித்தார். அவர் கனவில் தோன்றிய முருகன், “எனக்கு சுருட்டு படைப்பது பிறருக்கு முடிந்த உதவியைச் செய்ய வேண்டும்; இருப்பதை அடுத்தவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதனால்தான் அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக்கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே” என்றார். அதன் பிறகு இன்றுவரை இப்பழக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பக்தர்கள் இந்த சுருட்டைப் பிரசாதமாகப் பெற்று, வீட்டில் கொண்டு வைக்கின்றனர். இறைவன் நாம் அன்புடன் படைக்கும் எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதையே இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. இத்தலத்தில் நோய், துன்பம் விலகவும், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் பெருகவும் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார்கள்.
சுப்ரமணிய சுவாமி கோவில்
புத்தாண்டில் படிபூஜை நடக்கும் முருகன் தலம்
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிவில் வருடத்தின் நாட்களைக் குறிக்கும் விதமாக 365 படிகளுடன் அமைந்திருக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, புத்தாண்டில் ஆங்கிலேயர்களைச் சந்தித்து வாழ்த்து கூறுவதை மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இந்தப் பழக்கத்தில் இருந்து மக்களை ஆன்மிக வழியில் திருப்ப, முருகபக்தரான வள்ளிமலை சுவாமிகள் 1917ல், புத்தாண்டில் படிபூஜை செய்து முருகனை வழிபடும் வழக்கத்தைக் கொண்டு வந்தார். புத்தாண்டிற்கு முதல்நாள் இரவில் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள், குங்குமம் வைத்து கற்பூரம் ஏற்றி பூஜித்து, ஒரு திருப்புகழ் பாடப்படுகிறது. அனைத்து படிகளுக்கும் பூஜை செய்த பின்பு, நள்ளிரவு 12 மணிக்கு முருகனுக்கு விசேஷ பூஜை நடக்கின்றது. தமிழ்ப்புத்தாண்டில் 1008 பால் குட அபிஷேகம் நடக்கும்.
சுப்ரமணிய சுவாமி கோவில்
குழந்தை முருகனுக்கு வெந்நீர் அபிஷேகம்
திருத்தணி மூலஸ்தானத்திற்கு பின்புறமுள்ள சுவரில் குழந்தை வடிவில், ஆதி பாலசுப்பிரமணியர் இருக்கிறார். கைகளில் அட்சர மாலை, கமண்டலத்துடன் இருக்கும் இந்த முருகனே, வள்ளி திருமணத்திற்கு முன்பு இங்கு எழுந்தருளியிருந்தார். மார்கழி திருவாதிரையில் இவருக்கு வெந்நீரால் அபிஷேகிக்கின்றனர். குளிர்காலம் என்பதால், அவர் மீதுகொண்ட அன்பினால், வெந்நீர் அபிஷேகம் செய்யப்படுகிறது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்து அருள் பாலிக்கும் தலம்
திருவிடைக்கழி,சிதம்பரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருக்கடவூருக்கு தென்மேற்காக அமைந்துள்ளது. திருக்கடவூரில் இருந்து தில்லையாடிக்குச் செல்லும் வள்ளியம்மை நினைவு வளைவு சாலைவழியாக 3 கி.மீ. தெற்காகச் சென்று மேற்காக திரும்பினால் இத்திருத்தலத்தை அடையலாம்.இறைவர் திருப்பெயர் காமேசுவரர். இறைவியார் திருப்பெயர் காமேசுவரி. முருகனின்திருப்பெயர் சுப்பிரமணிய சுவாமி. இத்தலத்தில் இரண்டு வெவ்வேறு தலமரங்கள் உள்ளன; இவற்றுள் குரா மரம் முருகப் பெருமானுக்கும், மகிழ மரம் இறைவனுக்கும் தல மரங்களாம்.சுப்பிரமணியக் கடவுள் இக்குராமரத்தின் கீழ் யோக நிட்டையில் இருக்கின்றாராதலின் இங்கமர்ந்து தியானம் செய்தல் சிறப்புடையதாகின்றது.கருவறையில் முருகப்பெருமானுடன் சிவபெருமானும் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.இங்குள்ள முருகப்பெருமானுக்கு மயிலுக்குப் பதிலாக யானை வாகனமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.மூலத்தானத்தில் முதற்கண் பிரதான மூத்தியாக சுப்பிரமணியப் பெருமானும், பின்னால் உள்ளடங்கிச் சிவலிங்க மூர்த்தமும் காட்சி தருகின்றனர். இருமூர்த்தங்களுக்கு உள்ள தனித்தனி விமானங்களில், முருகனுடைய விமானம் சற்று உயரமாகவும், இறைவனுடைய விமானம் சற்று தாழவும் உள்ளது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகப் பெருமான் முக்தி தரும் தலம்
மயில் வாகனன் முருகன், வள்ளி, தெய்வயானை இல்லாமல் தனித்துக் காட்சி தரும் கோலத்தில் மயில் மீது அமர்ந்திருக்கையில், மயிலின் முகம் நேர்கொண்ட பார்வையில் காணப்படும். வள்ளி தெய்வ யானையுடன் முருகன் அமர்ந்திருக்கும்போது மயிலின் முகம் வலப்புறமாக நோக்கி யிருக்கும். வலப்புறம் வள்ளியும் இடப்புறம் தெய்வயானையுமாய்க் காட்சி தரும் முருகனைத்தான் கோயில்களில் பெரும்பாலும் காண முடியும். போகவாழ்வு தரும் முருகனின் கோலம் இது. ஆனால் வலப்புறம் தெய்வயானையும் இடப்புறம் வள்ளி என்ற கோலத்தில், ஞானியர்க்கு முக்தி தரும் மூர்த்தியாகக் காட்சிதரும் முருகனாக வயலூர் சுப்பிரமணிய சுவாமி விளங்குகின்றான்.
கந்தசாமி கோவில்
பாஸ்போர்ட், விசா பெற ஏற்படும் தடைகளை தகர்க்கும் முருகப்பெருமான்
திருப்போரூர் கந்தசாமி கோயில் முருகன் சந்நிதி சுற்றுச்சுவரில் அவரது ஒரு வடிவமான குக்குடாப்தஜர் (குக்குடம் என்றால் சேவல்) சிலை உள்ளது. ஒரு கையில் சேவல் வைத்திருப்பதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. பாஸ்போர்ட், விசா கிடைக்க தாமதம் அல்லது சிக்கல் இருந்தால், வெளிநாடு செல்ல முடியதாவர்கள் இவருக்கு அர்ச்சனை செய்து வேண்டிக் கொள்கிறார்கள். வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் நலமாக இருக்கவும் இவரை வேண்டிக் கொள்கிறார்கள்.
சுப்ரமணிய சுவாமி கோவில்
முருகனின் இடப்பக்கம் மயிலின் தலை திரும்பி இருக்கும் தலம்
நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார்14 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது பெரம்பூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் .இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு முகங்களுடனும் 12 திருக்கரங்களுனும் மயில் மீது அமர்ந்து வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். பெரும்பாலான முருகன் ஆலயங்களில் மயிலின் தலையானது முருகனின் வலப்பக்கம் திரும்பியிருக்கும் ஆனால் இத்தலத்தில் மயிலின் தலையானது முருகனின் இடப்பக்கம் திரும்பி இருக்கிறது.இது ஒரு விசேடமான அமைப்பாகும்.
சுப்பிரமணிய சுவாமி கோயில்
சூரசம்ஹாரம் நடைபெறாத முருகன் தலம்
முருகப்பெருமான் திருச்செந்தூரில், அசுரர்களுடன் போரிட்டு வென்றதன் அடிப்படையில் முருகத்தலங்களில், கந்தசஷ்டியின்போது சூரசம்ஹாரம் விமரிசையாக நடத்தப்படும். ஆனால் திருத்தணி,முருகன், கோபம் தணிந்து காட்சி தரும் தலமென்பதால் இங்கு சூரசம்ஹாரம் கிடையாது. அன்று முருகனைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. அப்போது, ஆயிரம் கிலோ பூக்களை புஷ்பாஞ்சலிக்காகப் பயன்படுத்துகிறார்கள்.