வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில்
முருகப் பெருமான் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு காட்சி அளிக்கும் திருப்புகழ் தலம்
திருத்தணியிலிருந்து 37 கி.மீ தொலைவில், கொசஸ்தலை ஆற்றின் கரையில் அமைந்த தலம் வெளியகரம் பிருத்வீச்வரர் கோவில். நகரி வழியாகவும் (63 கி.மீ) செல்லலாம். இறைவியின் திருநாமம் புவனேஸ்வரி அம்மன். இத்தலத்திற்கு வெள்ளிகரம், வள்ளிகரம் என்ற பெயர்களும் உண்டு.
இத்தலத்து முருகப் பெருமான் சுமார் மூன்றடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். அவருக்குப் பின்புறம் மயில் உள்ளது. அவர் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் வஜ்ர சக்தியும், முன் வலக் கரம் அபய முத்திரையிலும், முன் இடக் கரம் இடுப்பிலும் வைத்தபடி காட்சி அளிக்கிறார். இரு புறமும் வள்ளி,தேவயானை உள்ளனர்.
இத்தலத்து முருகனை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் போற்றி பாடியுள்ளார். மொத்தத் திருப்புகழ்ப் பாடல்களிலும் எட்டு விதமான சந்தங்கள் வந்துள்ள ஒரே தலப் பாடல் வெளியகரத்துக்கு மட்டுமே உரியது. வெள்ளிகரம் முருகனைப் பாடிய ஒன்பது திருப்புகழ் பாடல்களில் (நவ ரத்ன திருப்புகழ்) வள்ளி மலை, வள்ளியின் பிறப்பு, வள்ளி குருவியோட்டிய தினைப் புனம், அவள் கொடுத்த தினை மாவு, அவள் மீது மையல் கொண்டது, அவள் கரம் பிடித்தது ஆகியவற்றையும் பாடி இன்புறுகிறார்.