வள்ளிமலை முருகன் கோவில்
முருகன் வள்ளியை காதலித்த இடம்
முருகனை கணவனாக அடைய வள்ளி திருமாலை வழிபட்ட தலம்
திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படும் திருப்புகழ் தலம்
வேலூர் மாநகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும், ராணிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது வள்ளிமலை முருகன் கோவில். முருகப் பெருமான் வள்ளியை காதலித்து கரம் பிடித்த ஊர் என்பதால் இவ்விடத்திற்கு வள்ளிமலை என பெயர் வந்தது. வள்ளி இந்த ஊரில் பிறந்து வளர்ந்ததும் வள்ளிமலை என பெயர் பெற காரணமாகும். இக்கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மலை மேல் உள்ள கோவிலுக்கு செல்ல 454 படிக்கட்டுகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம் இது.
மலைக்கோவிலில் சுப்பிரமணியர் குடவறை சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கு முருகன் சன்னதியில், முருகன் கருவறைக்கு மேலே விமானத்திற்கு பதிலாக கோபுரம் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். வள்ளி வேடர் குலத்தில் வளர்ந்ததால், அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. ஒரு சமயம், முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
கன்னிப்பருவத்தில் வள்ளி தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் 'குமரி வள்ளி'க்கு சன்னதி இருக்கிறது. இவள் கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். தினைப்புனத்தில் வள்ளியை சந்தித்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். முருகனை கணவனாக அடைய விரும்பிய வள்ளி, இத்தலத்தில் திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். இதனால் இங்கு பக்தர்களுக்கு திருமாலின் பாதம் பொறித்த சடாரி சேவை செய்யப்படுகிறது.
முருகன் வள்ளியை மணக்க விரும்பியதையறிந்த நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க, இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
முருகன், தெய்வானை திருக்கல்யாணம் கந்தசஷ்டிக்கு மறுநாள் நடக்கிறது. மாசி பௌர்ணமியன்று, இத்தலத்தில் முருகன் வள்ளி திருமணம் நடைபெறுகிறது.